Sunday, 24 September 2017

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

சிவாயநம
திருச்சிற்றம்பலம்
ஒருவா் சைவநெறி தவராமல் வாழுவாா் என்றால் 

திருத்தாண்டகத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள்-
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே. 


சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.


10. பொ-ரை: சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத்தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.
கு-ரை: இத் திருத்தாண்டகம், உலகியலைப் பற்றாது, மெய்ந் நெறியையே பற்றி நிற்கும் தமது உள்ள நிலையை அருளிச்செய்தது.
சங்க நிதி - சங்கு வடிவாகக் குவிக்கப்பட்ட நிதி. பதுமநிதி - தாமரை வடிவாகக் குவிக்கப்பட்ட நிதி. இனி, 'சங்கம், பதுமம்' என்பன சில பேரெண்கள்' எனவும் கூறுப. 'இந்நிதிகள் குபேரனிடத்து உள்ளன' எனவும், 'அவற்றிலிருந்து எத்துணைப் பொருள் கொள்ளினும் அதனாற் குறையாது முன்னையளவில் நிரம்பி நிற்கும் தெய்வத் தன்மை உடையன' எனவும் சொல்லுப. தரணி - பூமி. 'வான் தருவரேனும்' என இயையும். "இரண்டும்தந்து" எனவும், "தரணியொடு வான் தருவரேனும்" எனவும் அருளியன, 'அவைகளை ஒரு சேரக் கொடுப்பினும்' என்றபடியாம். "தருவரேனும்" என்றது, 'மனிதருள் சிலர் தரவல்லராயினும்' என்றவாறு. மங்குவார் - நிலையின்றி அழிவார். 'மங்குவாராகிய அவரது செல்வத்தையாம் ஒரு பொருளாக மதிப்போம் அல்லோம்' என்க. மாதேவர்க்கு - சிவபெருமானார்க்கு. இதனை, 'மாதேவரிடத்து' எனத் திரித்துக்கொள்க. ஏகாந்தர் - ஒருதலையாய் உணர்வுடையவர்; 'பிற தேவரிடத்துப் பலதலைப்பட்டுச் செல்லாதவர்' என்றபடி. ஒரு சாரார், ஏகாரத்தைப் பிரிநிலை இடைச்சொல்லாக்கி, 'காந்தர்' எனப் பிரித்து, 'அன்பு உடையவர்' என உரைப்பர். 'அல்லாராகில் மதிப்போமல்லோம்' என இயையும்.
அங்கம் - உறுப்பு. தொழுநோய் - குட்டநோய். இதனை அருளியது, காட்சிக்கு இன்னாராதலைக் குறித்தற்கு. 'காட்சிக்கு இன்னாராவாரை அணுகிப் பணிபுரிதல் கூடாதாயினும் புரிவேம்' என்றல், திருவுள்ளம் என்க.
ஆ - பசு; இஃது, 'உயிரோடு நின்றது, உயிர்நீத்தது' என்னும் இரண்டனையும் குறித்து நின்றது. "ஆவுரித்துத் தின்று உழலும்" என விதந்தோதியது, 'புலையராவார் இவர்' என்பதும், 'அவர் புலையராயினமை இத் தீத்தொழிலால்' என்பதும் உணர்த்தற்கு. தூய உடம்பினவாய், பிற அனைத்தையும் தூய்மை செய்வனவும் தேவர்கள் விரும்பி ஏற்பனவும் ஆகிய பால் முதலிய ஐந்தினையும் தருவனவாய், தேவரொடு வைத்து வழிபடப்படும் ஆவைக் கோறலாகிய தொழிலினும் தீயதொழில் பிறிதொன்று காணாமையின், அது செய்வாரைப் பிறர்யாவரும், 'புலையர்' என்றிகழ்ந்தனர் என்பதாம். புலையர் - கீழோர். வடமொழியுள் இவரை, 'சண்டாளர்' என்பர். 'இறைவன் தன்னிடத்து உண்மை அன்பு உண்டாகப் பெற்றாரிடத்துப் பிறப்பின் சார்பால் உளவாகி, பல்வேறாகிய காரணங்களால் அகற்றப்படாது நிற்குங் குற்றங்களை நோக்கி அவரைக் கடிந்தொழியாது, அவர் தம்அன்பு ஒன்றையே நோக்கி அவரை உகந்தருளுவன்' என்பதும், பிறப்பு முதலியவற்றால் உயர்ந்தோரும் அவரை வணங்கற் பாலர் என்பது இறைவன் திருவுள்ளமாதலும் கண்ணப்ப நாயனாரது வரலாற்றால் இனிது விளங்கிக் கிடத்தலின், "புலையரேனும் - கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில், அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளார்" என்று அருளிச்செய்தார். இதனானே, 'சிவனடியாரை' அவர்தம் பிறப்பு முதலியன நோக்கி இகழற்க' என விலக்கினமை பெற்றாம்.
'இறைவனிடத்து எத்துணைச் சிறந்த அன்பும் தொண்டும் உடையராயினும், இலராயினும் அவரை அவர்தம் பிறப்பு, தொழில் முதலியவற்றின் உயர்வு தாழ்வுகட்கேற்பக் கொள்ளுதல் உலகியல்' என்பதும், 'பிறப்பு, தொழில் முதலியவற்றால் எத்துணை உயர்வு தாழ்வுகள் உடையராயினும், அவரை அவர்க்கு இறைவனிடத்துள்ள அன்பு, தொண்டு என்னும் இவற்றின் நிலைகட்கு ஏற்பக் கொள்ளுதல் மெய்ந்நெறி' என்பதும் இத்திருத்தாண்டகத்தால் இனிது விளங்கிக் கிடக்கின்றன.
இம் மெய்ந்நெறி முறைமை, 'சண்டாளனாய் இருப்பினும், 'சிவ' என்று சொல்வானேல், ஒருவர் அவனோடு பேசுக; அவனோடு வசிக்க; அவனோடு இருந்து உண்க' என, உபநிடதத்தினும் (முண்டகம்) கூறப்பட்டமை, பிரம சூத்திரம் நான்காம் அத்தியாயம் முதற்பாதம் பன்னிரண்டாம் அதிகரணத்துள் நீலகண்ட பாடியத்துக் காட்டப்பட்டது. எனினும், அம்மந்திரம் இக்காலத்து அவ்வுப நிடதத்துட் காணப்பட்டிலது; அது மெய்ந்நெறிப்பற்றின்றி உலகியற்பற்றே உடையோரால் மறைக்கப்பட்டது போலும்! அஃது எவ்வாறாயினும், வடநூற்கடலும் தென்றமிழ்க்கடலும் நிலை கண்டுணர்ந்த, சிவஞானபோத மாபாடிய முதல்வராகிய மாதவச் சிவஞான யோகிகள், மேற்காட்டிய உபநிடத மந்திரத்தையே, தமது கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதியில்,
"சிவனெனும் மொழியைக் கொடியசண் டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக
அவனொடு கலந்து பேசுக அவனோ
டருகிருந் துண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோ டுடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவே
றெனக்கிலை கலைசையாண் டகையே"
என மொழிபெயர்த்துக் கூறினார். இவற்றை எல்லாம் அறிந்த பின்பும், 'இங்கு', 'சண்டாளன்' என்றது, ஜன்ம சண்டாளனை அன்று; கன்ம சண்டாளனையே; அஃதாவது, பிறப்பில் சண்டாளர் இனத்திற் பிறந்தவனை அன்று; உயர்ந்த வருணத்திற் பிறந்து, தனது சாதி தருமத்தில் வழுவினமையால் சண்டாளத்துவம் எய்தி நின்றவனையே' என மீளவும் தம் உலகியல் முறைமையினையே நிலைநிறுத்த முயல்வர் சிலர். இக்கருத்தினை உபநிடதம் வெளிப்படக் கூறாது செல்லினும், அதனை விளக்கவே புகுந்த சிவஞான யோகிகள் தாமும் கூறாதது என்னையோ என்க. இனி, மேற்கூறிய உபநிடத மந்திரத்தினையே உபவிருங்கணம் செய்யும் (வலியுறுத்திக் கூறும்) வாசிட்டலைங்க சுலோகம் ஒன்றை, காசிவாசி செந்திநாத ஐயர் அவர்கள் காட்டியுள்ளார்கள்; அதனுள்ளும், சண்டாளனைக் 'கன்ம சண்டாளன்' என விதந்தோதவில்லை. விதவாதவழி 'சண்டாளன்' என்னும் சொல், இயல்பாய் உள்ள உண்மைச் சண்டாளனைக் குறித்தல் அன்றி, ஒரு காரணம் பற்றி அவனோடு ஒப்பிக்கப்படுவானைக் குறிக்குமாறில்லை. ஆகவே, ஓரிடத்தும் இல்லாத அப்பொருளை அச்சொல்லிற்கு யாண்டும் கற்பித்துக் கூறுதல், அச்சுருதிகளாலும் அவர் மனம் மெய்ந் நெறிக்கண் செல்லாமையையே காட்டுவதாகும். இத்தன்மையோரை நோக்கியே, "பலநல்ல கற்றக்கடைத்தும் மன நல்ல ராகுதல் மாணார்க் கரிது" (குறள் - 823) என்றருளினார், திருவள்ளுவநாயனார். ஆகவே, அவர் கூறும் அது, மெய்ந்நெறி முறைமை கூற எழுந்த உபநிடதங்கட்கும், திருமுறைத் திருமொழிகட்குங் கருத்தாகாமை அறிக. "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்' என்றெழுந்த நாயனார் திருமொழி, இவ்வகை விவாதங்கட்குச் சிறிதும் இடம் செய்யாது, பிறப்பால் புலையராயினாரையே குறித்தல் இங்குக் குறிக்கொண்டு உணர்தற்பாலதாகும்.
திருச்சிற்றம்பலம்
சிவாயநம

No comments:

Post a Comment