Sunday, 3 September 2017

சோழநாடு

சோழநாடு

    இன்றுள்ள தஞ்சை, திருவாரூர்,     நாகப்பட்டினம்,
திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள், கடலூர்
மாவட்டத்தின் ஒருபகுதி, கரூர் மாவட்டத்தின் ஒருபகுதி,
பெரம்பலூர் மாவட்டத்தின் ஒருபகுதி ஆகியவை அடங்கிய
பகுதியே பழைய சோழநாடாகும்.

சிறப்பு

    காவிரி நதியின் நீர் வளத்தால் சோழநாடு செழுமையடைந்தது.
பூம்புகார் நகரமும், உறையூரும் சோழர் தலைநகரங்களாக
விளங்கின. சோழ நாட்டிற்குப் பொன்னி நாடு என்ற பெயரும்
இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) சிறந்த துறைமுகமாக
விளங்கியது.

இலச்சினை

    சோழர்க்குப் புலி இலச்சினையும் புலி உருவம் பொறித்த
கொடியும் உரிமையுடையவையாகத் திகழ்ந்தன.

சோழ மன்னர்கள்

    சோழர் ‘வளவர்’ எனப் பெயர் பெற்றனர். சேரர், பாண்டியர்
போன்ற அரசர்களோடும்     குறுநில     மன்னர்களோடும்
போர்தொடுப்பதும், நட்புக்கரம் நீட்டுவதும் சூழல்களுக்கு ஏற்ப
அமைந்தன.

இலக்கியச் சான்றுகள்

    சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தியொரு சோழ
மன்னர்களின் பெயர்கள் பற்றி அறிய முடிகிறது. அவ்வரசர்களின்
பெயர்களாவன :
    (1) இராய சூயம் வேட்ட பெரு நற்கிள்ளி
    (2) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி
     (3) உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
    (4) ஏனாதி திருக்கிள்ளி
    (5) கரிகாற் பெரு வளத்தான்
    (6) குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
    (7) குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
    (8) கோப்பெருஞ்சோழன்
    (9) செங்கணான்
    (10) செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
    (11) தித்தன்
    (12) துலை புக்க பெரியோன்
    (13) தூங்கெயில் எறிந்தோன்
    (14) நலங்கிள்ளி
    (15) நல்லுருத்திரன்
    (16) நெடுங்கிள்ளி
    (17) நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
    (18) பேரவைக் கோப்பெருநற்கிள்ளி
    (19) மாவளத்தான்
    (20) முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
    (21) வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

1.2.3 பாண்டிய நாடு

    தற்போதைய மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை
மாவட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி,
திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி,
தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய தென் தமிழகமும்
பண்டைய பாண்டிய நாடாகும்.

சிறப்பு

    வையையாறு, பொருநையாறு (தாமிரபரணி) ஆகிய ஆறுகள்
பாண்டிய நாட்டை வளமுடையதாகச் செய்தன. தொண்டி,
கொற்கை ஆகியவை துறைமுக நகரங்களாக விளங்கின.

இலச்சினை

    பாண்டிய நாட்டின் தலைநகரமாக மதுரை விளங்கியது.
பாண்டியர்களின் இலச்சினையாகவும் கொடியாகவும் மீன் (கயல்)
சின்னம் திகழ்ந்தது.

பாண்டிய மன்னர்கள்

    சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தைந்து பாண்டிய
மன்னர்களின் பெயர்களை அறிய முடிகிறது.
    (1) அண்டர் மகன் குறுவழுதி
    (2) அறிவுடை நம்பி
    (3) ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
    (4) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
    (5) ஏனாதி நெடுங்கண்ணன்
    (6) ஒல்லையூர் தந்த பூதபாண்டியன்
    (7) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
    (8) கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
    (9) கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி
    (10) கீரஞ்சாத்தன்
     (11) குறுவழுதியார்
    (12) கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
    (13) சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
    (14) தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
    (15) நம்பி நெடு்ஞ்செழியன்
    (16) நல்வழுதி
    (17) நிலந்தரு திருவின் நெடியோன்
    (18) பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
    (19) பொற்கைப் பாண்டியன்
    (20) மதிவாணன்
    (21) மாலை மாறன்
    (22) மாறன் வழுதி
    (23) முடத்திருமாறன்
    (24) வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
    (25) வெற்றி வேற் செழியன்

குறுநில மன்னர்கள்

    சோழ நாட்டின் வடக்கிலுள்ள பெண்ணையாற்றுப் பகுதியில்
திருக்கோவலூரைத் தலைமையிடமாகக் கொண்டு சேதி நாட்டை
மலையமான் மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் நாட்டிற்கு
வடபால் உள்ள தமிழகப் பகுதி ஓய்மாநாடு என அழைக்கப்
பெற்றது. அதனை அடுத்து விளங்கிய தொண்டை நாட்டைத்
தொண்டைமான்கள் ஆட்சி செய்தனர். சோழ நாட்டிற்கு மேற்காக
அமைந்தகொங்கு நாட்டில் சத்திய புத்திரர் எனும் அதியமான்
மன்னர்கள் தகடூரைத் (தர்மபுரி) கொண்டு ஆட்சி செய்தனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவன் அதியமான் நெடுமானஞ்சி
ஆவான். பழனிமலைப் பகுதியைப் பேகன் மரபினரும், உடுமலைப்
பேட்டைப் பகுதியைக் குமணனது மரபினரும் ஆண்டனர். சோழ,
பாண்டி நாட்டு எல்லையில் அமைந்த     பறம்புமலைப்
பகுதியைப் பாரியும், பொதிய மலைப் பகுதியை ஆய் எனும்
அரசனும், சேர்வராயன் மலைப் பகுதியை வல்வில் ஓரியும்,
நள்ளியும் ஆண்டு வந்தனர். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள
நாஞ்சில் நாட்டுப் பகுதியை வள்ளுவர் எனும் மரபினர் ஆண்டு
வந்தனர்.

No comments:

Post a Comment