Saturday, 15 April 2017

சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு தமிழக மக்களிடம் நிலவியது என்ற உண்மையை தொல்காப்பியம், புறத்திணை இயலில் "கொடிநிலை வள்ளி" என்ற நூற்பா நன்கு விளக்குகிறது.
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற  வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்  கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே''*  என்று தொல்காப்பியம் கூறும்.

இறையனார் களவியல் உரை நக்கீரனார் இயற்றியது. இவ்வுரை மூலம், சிவபெருமானே தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தார் என்பது பெறப்படும் செய்தியாகும்.

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெரிந்த முருகவேளும் தமிழ்ச்சங்கம் வளர வழிகாட்டினர்.

சங்க இலக்கிய வழி உணர்ந்த திருவிளையாடல் புராண ஆசிரியரும் கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து தமிழாய்ந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவார்.

கடவுள் உணர்வுடன் தான், கடவுள் வழிகாட்டுதல் படிதான் சங்க இலக்கியங்கள் மலர்ந்தன என்பதை இறையனார் களவியல் உரை மூலம் நாம் தெளியலாம்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைத் தமிழக மக்கள், நானிலங்களிலும் தெய்வ வழிபாட்டைப் போற்றினர் என்பதையும் தொல்காப்பிய இலக்கண நூலும், அதனைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் தெளிவுறுத்தும்.  சங்கப் பனுவல்களுள் பத்துப்பாட்டுள் ஒன்றான "திருமுருகாற்றுப்படை" தான் முதன்முதல் முருகப்பெருமானைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். சமய ஒருமைப்பாட்டுக்கும், சமய வளர்ச்சிக்கும் வித்திட்ட முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படை என்றும் கூறலாம். முருகப்பெருமானைப் பாராட்டும் நக்கீரர், பிற தெய்வங்களை இகழாமல், அவற்றையும் போற்றுவார்.
வைணவக் கடவுளான திருமால் அழகனையும் பாராட்டுகிறார் நக்கீரர்.*
"பாம்பு படப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்  புல் அணி நீள் கொடிச் செல்வன்''*
வேற்றுச் சமயக் காழ்ப்பின்றி, அனைத்துச் சமய உணர்வையும் மதிக்கும் சமய ஒருமைப்பாட்டு நெறிக்கு திருமுருகாற்றுப்படை வழிகாட்டுகிறது.
முருகப் பெருமானைப் பற்றி முதன்முதலில் எழுதப்பட்ட நூலாகிய திருமுருகாற்றுப்படை "உலகம்" என்றே தொடங்குகிறது. நிலப்பகுப்பைக் கூறும் தொல்காப்பியம்,
காடுறை உலகம்    - மைவரை உலகம்    - தீம்புனல் உலகம்    - பெருமணல் உலகம் என்றே குறிப்பிடும்
 .
 திருக்குறளும் "ஆதி பகவன் முதற்றே உலகு" என்றே கூறும்.  

சங்கநூல் வழி, சமய வளர்ச்சி மேற்கொண்ட கம்பர் "உலகம் யாவையும்" என்றும்,    - சேக்கிழார் பெருமான் பெரியபுராண தொடக்கத்தில், "உலகெலாம்" என்றும் கூறியமை சமய வளர்ச்சி நிலைகளையும், அதன்வழி சமுதாய நெறிமுறை வளர்ந்த பாங்கையும் புலப்படுத்தும்.
இறைவனிடம்,    - அன்பும்    - அருளும்    - அறமும் வேண்டும் என்றே கேட்க வேண்டும் என்பதே சங்க இலக்கியம் காட்டும் சமய நெறியாகும்

தமிழர் மீண்டும் வாழ்வில் வளம் பெற, நம் முன்னோர்கள் நமக்கு அளித்த மனிதனைத் தெய்வமாக மாற்றும் சிறப்புடைய சங்க இலக்கியங்களைக் கற்போம்; வாழ்வில் வளம் சேர்ப்போம்.

No comments:

Post a Comment